பீலா ராஜேஷ் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். வெங்டேசன் - ராணி தம்பதிகளுக்கு மகளாக 1969ம் ஆண்டு பிறந்தார். பீலாவின் அப்பா வெங்கடேசன், போலீஸ் டி.ஜி.பி.,யாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது அம்மா ராணி வெங்கடேசன், பாரம்பர்ய காங்கிரஸ்காரர். நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட ராணி வெங்கடேசன், 2006 சட்டசபைத் தேர்தலில் சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனவர். தூத்துக்குடி மாவட்டம் வாழையடி தான் வெங்கடேசனின் சொந்த ஊர்.
வெங்கடேசன் - ராணி வெங்கடேசன் தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மகன் கார்த்திக். மகள் பீனா இருவரும் சிங்கப்பூரில் செட்டிலாகிவிட, மற்றொரு மகள் பீலா மட்டும் இந்தியாவில் இருக்கிறார்.
டாக்டர்.. பின் ஐ.ஏ.எஸ்.,:
பீலா, படித்து, வளர்ந்தது எல்லாமே சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கம் தான். படிப்பில் கெட்டிக்காரராக இருந்த பீலா, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., முடித்தார். 1989 ஒடிசா கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரியான ராஜேஷ் தாஸை காதலித்து 1992ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின், ராஜேஷ் தாஸ் தமிழகத்துக்கு தன் பணியிடத்தை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். தற்போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் ஏ.டி.ஜி.பி.,யாக ராஜேஷ் தாஸ் உள்ளார். கொட்டிவாக்கத்திலுள்ள இவர்கள் வீட்டுக்கு அருகிலேயேதான் பீலா ராஜேஷின் பெற்றோரும் வசிக்கின்றனர்.